மத்திய நிதியமைச்சர் என்ற முறையில், வெங்காயத்தின் விலையேற்றம் குறித்து, நிர்மலா சீதாராமனிடம் விளக்கம் கேட்டால், அவர் சம்மந்தம் இல்லாமல் பேசி வருகிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலாய்த்துள்ளார்.
வெங்காயத்தின் விலை உயர்வு, நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. டெல்லி தொடங்கி சென்னை வரை, நாட்டின் முக்கிய நகரங்களில் வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாகவே, வழக்கத்தைவிட பன்மடங்கு அதிகமாக விற்கப்பட்டு வருகிறது.
கனமழை காரணமாக கர்நாடகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காய சாகுபடி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதும், சந்தையில் வெங்காயத்தை மொத்தமாக பதுக்கி வைத்து விற்பதுமே, வரலாறு காணாத இதன் விலையேற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
வெங்காய விலை உயர்வை வைத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த மேட்டரை வைத்து நெட்டிசன்களும், தங்கள் பங்குக்கு சமூக வலைதளங்களில் மத்திய அரசை சகட்டுமேனிக்கு கலாய்த்து வருகின்றனர்.